மண் கொள்ளையின் காயங்களை சுமந்து நிற்கும் கோவை : புகைப்படங்கள் சொல்லும் உண்மை!

Hero Image
Ganesh கோவை மாவட்டத்தில் மண் கொள்ளை பாதிப்பு

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் 300 கி.மீ. துாரத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியிலும், அடிவாரப்பகுதிகளிலும் வனத்துறை, அரசு நிலங்கள் தவிர்த்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பட்டா நிலங்களும் உள்ளன.

பல்வேறு காட்டுயிர்களின் வாழ்விடமாக உள்ள இங்குதான் கடந்த 20 ஆண்டுகளில் அபரிமிதமான அளவுக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண் கொள்ளையில் அதிகமான சூழலியல் பாதிப்புக்குள்ளானது, தடாகம் பள்ளத்தாக்கு.

இதில் அமைந்துள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், 24 வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் எவ்வித அனுமதியுமின்றி 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இந்த சூளைகளுக்காகவே வரன்முறையின்றி பட்டா மற்றும் அரசு நிலங்களில் மண் கொள்ளை நடந்தது.

Newspoint
BBC கோவை

உயர்நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு, மண் கொள்ளை மற்றும் சூழலியல் பாதிப்புகள் குறித்து குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பட்டா நிலங்களில் மட்டுமின்றி, வனத்துறை, பூமி தான நிலம், பஞ்சமி நிலம், அறநிலையத்துறை, மின் வாரிய நிலம், பாரதியார் பல்கலைக்கழக நிலம் நீர்நிலை உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் 5 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மண் கொள்ளை நடந்திருப்பதாக சர்வே எண்களுடன் 129 பக்க அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ.379 கோடி மதிப்பில் மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், ரூ.59.74 கோடி மதிப்பிற்கு சூழலியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால் மண் கொள்ளையில் மதிப்பிடப்பட வேண்டிய 808 களங்களில் (Field) 565 இடங்களில் மட்டுமே ஆய்வு நடந்தது. விடுபட்ட 241 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 9500 ஏக்கர் பரப்பளவில் 5 மீட்டரிலிருந்து 45 மீட்டர் (ஏறத்தாழ 120 அடி) வரை மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், விடுபட்ட பரப்பளவு, மண்ணுக்கான தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின்படி, ரூ.40 ஆயிரம் கோடிக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு தெரிவித்தது.

Newspoint
BBC கோவை

அபராதத்தொகையை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம் முறையீடு செய்தது. அதன்படி, கனிம வளத்துறை ஆணையரால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பட்டா நிலங்களில் மட்டுமே மண் எடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அபராதத்தொகை ரூ. 13.10 கோடியாகக் குறைக்கப்பட்டது.

சூளை உரிமையாளர்கள் பலரும் சேர்ந்து ரூ.9 கோடி வரை உடனே செலுத்திவிட்டனர். மண் கொள்ளை தொடர்பான வழக்கின் காரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு, 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டு மின் இணைப்பும் கூட துண்டிக்கப்பட்டது.

அதனால் இந்தப் பகுதியில் மண் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிருந்த சூளைகள் இதே மேற்குத் தொடர்ச்சி மலையில் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் கடுமையான பல உத்தரவுகளை வழங்கினாலும், இங்கே அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதே வழக்கின் மனுதாரர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் அனைவருடைய ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது.

இதுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கும் மண் கொள்ளை, சூழல் பாதிப்புகளை விளக்கும் புகைப்படத்தொகுப்பு:

Newspoint
Ganesh மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன

கோவையில் தடாகம் பள்ளத்தாக்கில் நடந்த மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன. தடாகம் அருகே மலையடிவாரத்திலுள்ள மூலக்காடு என்ற மருதங்கரை கீழ்பதி என்ற பழங்குடியின மக்களின் கிராமத்தில் மக்களுக்காக போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் இது. அரசு நிலத்தில்தான் பொது குழாய் போடப்படுமென்ற நிலையில், இந்த குழாயைச் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு, குழாய் மட்டும் விடப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்த பின்னர் இப்போது இந்த குழாய் மட்டும் அகற்றப்பட்டு விட்டது. மேடு மேடாகவே இருக்கிறது. இதேபோலவே, மின் கம்பங்கள் உள்ள பகுதிகளிலும் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு கம்பங்கள் தனியாக நிற்கின்றன.

Newspoint
Ganesh தடாகம் பள்ளத்தாக்கு

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தடாகம் பள்ளத்தாக்குக்கு உட்பட்ட 5 கிராம ஊராட்சிப் பகுதிகளில் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நிலங்களில் நடந்த மண் கொள்ளையின் மாறாத சாட்சிகள். மண் எடுக்கப்பட்ட இடங்கள் சரி செய்யப்படாமல் அந்த இடங்களில் சீமைக்கருவேலங்கள் மறைத்து நிற்கின்றன.

Newspoint
Ganesh தடாகம் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த செங்கல்சூளைகளின் புகைபோக்கிகளின் கழுகுப்பார்வை காட்சி (இவை தற்போது செயல்பாட்டில் இல்லை)
Newspoint
Ganesh கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்தில் மண் அகழப்பட்ட இடம்

உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளால் 209 செங்கல் சூளைகள் மூடப்பட்டன. மண் எடுத்த லாரிகள், இயந்திரங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. மண் கொள்ளைக்கும், சூழலியல் இழப்பிற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மண் கொள்ளை நடந்த இடங்கள் சரி செய்யப்படவில்லை.

Newspoint
Ganesh நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் (கோப்புப்படம்)
Newspoint
Ganesh 2022 ஆம் ஆண்டு மண் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் பிடிக்கப்பட்டன

மண் கொள்ளை குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்தப் பகுதிகளை மறைப்பதற்காக சீமைக்கருவேலம் மரங்களை அங்கே வளர்த்து விட்டிருப்பதாக குற்றச்சாட்டுகயும் முன்வைக்கின்றனர். இதுவரை அந்தப் பகுதிகளில் சீமைக்கருவேலம் மரங்கள் எங்கெங்கு காணினும் நிறைந்து வளர்ந்து நிற்கின்றன.

Newspoint
BBC 2023 ஆம் ஆண்டு பதிவான காணொளியில் மணல் அகழப்பட்ட இடம் அருகே யானை நடந்து செல்கின்றது.

மண் கொள்ளைக்கு எதிரான வழக்குகளில், அந்தப் பகுதியில் யானை வழித்தடமே இல்லை என்று செங்கல்சூளை உரிமையாளர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அறிவித்துள்ள 39 வழித்தடங்களில் 2 வழித்தடங்கள் இந்த மலைப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

Newspoint
BBC இயற்கை நீரோடைகள் மூடப்பட்டுள்ளன - தடாகம் பள்ளத்தாக்கு

தடாகம் பகுதியில் நடந்த மண் கொள்ளையால் 112 இயற்கை சிற்றோடைகளில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவினர் குற்றம்சாட்டினர். தற்போது செங்கல் சூளை, மண் கொள்ளை நடக்கவில்லை. மாறாக மலையடிவாரத்தில் யானை வழித்தடங்களில் மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

தடாகம் வடக்கு காப்புக்காடுக்கு அருகில், மலையடிவாரத்தில் இயற்கையான நீரோடை துவங்குமிடத்திலேயே முற்றிலும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யானைகளின் பாதையைத் தடுக்கும் வகையில், மலையடிவாரத்தில் நீளமாக சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.

மலையிட பாதுகாப்புக்குழுமம் (HACA–Hill Area Conservation Authority) மற்றும் சூழல் முக்கியத்துவமுள்ள பகுதி (Eco Sensitive Zone) மற்றும் யானை வழித்தடம் என எதையும் கண்டு கொள்ளாமல் இங்கே அனுமதியில்லாமல் மணல் அகழப்பட்டுள்ளன.

Newspoint
Handout மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

நீதிமன்ற உத்தரவுகளால் மணல் அள்ளும் லாரிகள், இயந்திரங்கள் அவ்வப்போது காவல்துறையால் பிடிக்கப்படுகின்றன. ஆனால் இப்போதும் ஆங்காங்கே மண் அள்ளுவது பகலில் பகிரங்கமாகவே நடந்து வருகிறது. மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Newspoint
BBC கோவை மாவட்டம் நரசிபுரம் கிராமம்
Newspoint
BBC மாதம்பட்டி கிராமம், கோவை

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் ஆனைகட்டி மலையடிவாரப் பகுதிகளில் நடந்துவந்த மண்கொள்ளை இப்போது இடம் பெயர்ந்து மாதம்பட்டி, நரசிபுரம், தொண்டாமுத்துார், கோவனுார், தோலம்பாளையம் என வேறு சில பகுதிகளில் நடந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Newspoint