ரஷ்யாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானில் சுனாமி
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் பதிவாகியுள்ளது.
ஹவாயில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அலைகள் தற்போது வரை வரவில்லை என ஹவாய் ஆளுநர் ஜோஷ் க்ரீன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் பல இடங்களில் கடல் உள்வாங்கியுள்ளது எனக் கூறிய அவர், தற்போது நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், எதுவாக அடுத்த சில மணி நேரங்கள் கழித்து தான் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஹவாய் துறைமுகத்தில் உள்ள அனைத்து வணிக கப்பல்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
"கடவுளுக்கு நன்றி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை," என்று நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் "அனைத்து எச்சரிக்கை அமைப்புகளும்" சரியாக வேலை செய்ததாக கூறினார்.
மேலும் கரையோரம் இருக்கும் கப்பல்கள் சுனாமி அலைகள் கடந்து செல்கிற வரை கடலுக்குள்ளே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவாயை நோக்கிச் சென்ற அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஹவாயில் உள்ள மௌயி தீவு குடியிருப்பு வாசிகள் கடல் அலைகள் உயர்ந்து வருவதால் பாதுகாப்பாக இருக்க மலைப்பகுதிக்குச் செல்வதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். ஜான்சன் என்கிற குடியிருப்புவாசி பிபிசியிடம் பேசுகையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் டிரக்கில் மலைக்குச் சென்று இரவை அங்கு கழித்துவிட்டு வருவதாக தெரிவித்தார்.
ரஷ்யாவின் சகின் மாகாணத்தில் உள்ள வட குரில்ஸ் தீவுகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சுனாமி அலைகள் புகுந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் சகாலின் தீவில் மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சீனாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நிலநடுக்கத்தால் சீனாவின் சில கடலோரப் பகுதிகள் பாதிக்கபடலாம் என்றும் 30 செமீ முதல் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழலாம் என அந்த நாட்டின் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சீனாவைப் போல பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனீசியாவிலும் சுனாமி அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் முதல் கட்ட சுனாமி அலைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆபத்து இன்னும் முடியவில்லை என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரிய சுனாமி அலைகள் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருநாள் கழித்தும் தாக்கக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"சுனாமி அலைகள் திடீரென தாக்கக்கூடும். இதனால் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எச்சரிக்கை தளர்த்தப்படும் வரை பாதுகாப்பான இடங்களைவிட்டு வெளியே வர வேண்டாம்" என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி அலைகள் 3 மீட்டர் உயரம் வரை எழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சுமார் 19 லட்சம் பேர் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி பிபிசி டோகியோ ஷைமா கலீல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது.
இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும்.
ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார்.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார்.
"இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
"பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது.
சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன
- அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும்
- அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள்
- ஹவாய்
- குவாம்
ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு