மது குடிப்பதை கண்டித்த தாய் : அண்ணன், தம்பி எடுத்த முடிவு!

திருவள்ளூர் அருகே மது குடிப்பதைத் தாயார் கண்டித்ததையடுத்து மனமுடைந்த அண்ணன், தம்பி இருவரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (49) என்பவருக்கு விக்னேஷ் (28) மற்றும் கணேஷ் (24) என இரண்டு மகன்கள் இருந்தனர். கணேஷ், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரியும் பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகத் தெரிய வந்தது. இதனைத் தாயார் கண்டித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தில் இடையிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன், விக்னேஷும் கணேஷும் மது அருந்திய நிலையில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி, இருவரையும் கண்டித்துள்ளார்.
தாயின் கண்டிப்பால் மனமுடைந்த இரு சகோதரர்களும், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தனர். உடனே அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனளிக்கவில்லை. கணேஷ் நேற்று காலை, விக்னேஷ் மாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் இரு மகன்களையும் இழந்த ஜெயலட்சுமியின் நிலையை காணக் கூடியவர்கள் கண்கள் கலங்கினர்.