டைடல் பூங்கா திறந்த திமுக அரசு.. இளைஞர்கள் வாழ்க்கையில் மாற்றம் : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

Hero Image
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ஐ.டி துறையில் ‘தமிழ்நாட்டை இந்தியாவின் புத்தாக்க தலைநகராக மாற்றுதல்’ என்ற தலைப்பில் மாநாடு இன்று நடைபெற்றது. அமைச்சர் பிடிஆர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆரா ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற ஆழ்நிலை கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகளை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.



கருணாநிதியின் தொழில்நுட்பப் பார்வை



நிகழ்வில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி, “திராவிட இயக்கம் எப்போதுமே புதிய தொழில்நுட்பங்களை வரவேற்று ஊக்கப்படுத்தியுள்ளது. திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போது எல்லாம் புதிய தொழில்நுட்பங்களும் அவற்றின் பயன்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர செயலாற்றியது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வைதான் தமிழ்நாட்டில் டிஜிட்டல் யுகம் அமைய அடித்தளம் அமைத்தது. ஒரு முதலமைச்சராக இந்தியாவிலேயே ஒரு மாநிலத்துக்கு என பிரத்யேகமாக தொழில்நுட்பக் கொள்கை வகுத்தது, அந்த காலத்திலேயே துணிச்சலும் முற்போக்கும் நிறைந்த செயலாக பார்க்கப்பட்டது.



ஐடி துறையில் புதிய உச்சங்கள் தொட்ட திமுக அரசு




பள்ளிகளில் கணினி அறிவியல் படிப்பை அறிமுகப்படுத்தியதுடன், டைடல் பூங்காக்கள் அமைத்து பல லட்சம் இளைஞர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தது திமுக அரசு. கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை மாணவர்கள் மற்றும் வல்லுனர்களின் முன்னேற்றத்திற்கு பாதை அமைத்துத் தந்ததுடன் இன்று நாம் அடைந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக விளங்கச் செய்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.

Videoதமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் - உதயநிதி உறுதி



இந்த மாநாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் நடைபெறுகிறது. ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு எனது பாராட்டுகள். தமிழ்நாட்டை புத்தாக்க தலைநகராகவும், அறிவுசார் மையமாக மாற்ற வேண்டும் என்கிற நம் இலக்கை மாநாடு பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் புத்தாக்க தொழில்நுட்ப வளர்ச்சியில்

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குவதற்கு இது வழிவகுக்கும். முறையான கொள்கை, உட்கட்டமைப்பு வசதிகள், முதலீடுகள் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றின் மூலமாக இந்த பயணத்திற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் நான் தருகிறேன்” என்று பேசினார்.



முன்னதாக நிதித் துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐடி துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். அது முதல் ஐடி துறையின் மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையைத் தவிர 2ஆம் நிலை நகரங்களில் ஐடி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஐடி துறையின் வேலைவாய்ப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அத்துடன், ஐடி துறைக்கு என ஒவ்வொரு வருடமும் பிரத்யேகமாக மாநாடுகள், கருத்தரங்குகள் என தொடர்ச்சியாக பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.