மீண்டும் அல்வா கொடுத்த பாஜக : அதிருப்தியில் விஜயதரணி, சரத்குமார்!

Hero Image
காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த ஆளுமையாக வலம் வந்தவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அவர், தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பேத்தி. விஜயதரணி காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டவர்.



விளவங்கோடு தொகுதியில் ஹேட்ரிக் வெற்றி பெற்ற அவர், காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார். 2016 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட விஜயதரணி, கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். மேலும் அதே ஆண்டில் இரண்டாவது முறையாக விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார்.



அடிப்படையில் வழக்கறிஞரான விஜயதரணி, மூன்றாவது முறையாக விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற போது தமிழகமே அவரை திரும்பிப் பார்த்தது. காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த விஜயதரணிக்கு தேசிய அரசியலில் தடம்பதிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி எம்.பி. தேர்தலில் அவர் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு பலமுறை கட்சி மேலிடத்திடம் தனது விருப்பத்தை தெரியப்படுத்தினார்.



ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசந்த் அண்ட் கோ உரிமையாளர் வசந்த குமார் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததால், விஜயதரணி தேசிய அளவில் அரசியலில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வசந்தகுமாரின் மகன் காங்கிரஸில் தனக்கு போட்டியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி பெற்றதால், விஜயதரணி காங்கிரஸிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.



அதன்படி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், கர்நாடக மாநில பொறுப்பாளர், விளவங்கோடு எம்எல்ஏ என பல்வேறு பதவிகளை வகித்த அவர், அதையெல்லாம் துச்சமென கருதி கடந்த 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி 24-ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மக்களவை தொகுதி தனது ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கணக்கில் அவர் பாஜகவில் ஐக்கியமானார்.



ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு பாஜக சார்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது விஜயதரணிக்கு ஓரளவுக்கு அதிப்தியை ஏற்படுத்தியது. இதேபோல நெல்லை தொகுதியும் அவரை கைவிட்டதால் விஜயதரணி ஏமாற்றத்திற்கு உள்ளானார். இதற்கிடையே விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.



ஏற்கனவே விஜயதரணி இந்த தொகுதியில் தான் ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிலும் அவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்காததால், ஏமாற்றத்தின் விளிம்புக்கே சென்றார் விஜயதரணி. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பு வகித்த போது மேடையிலேயே தனக்கு பொறுப்பேதும் வழங்கப்படாதது குறித்து விஜயதரணி புலம்பித் தள்ளினார். அந்த வகையில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறி பாஜக நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.



இத்தகைய சூழலில் இன்று பாஜக மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணிக்கு ஏதாவது பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது விஜயதரணிக்கு ஏமாற்றத்தை அளித்தது.



இதே போல தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு பாஜகவோடு சங்கமித்த நடிகர் சரத்குமாருக்கும் பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை. நாடார் சமூகத்தைப் பிரதிபலிக்கும் சரத்குமாரும் பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தியில் தான் இருப்பதாக கூறப்படுகிறது சரத்குமாருக்கு அனேகமாக தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.



ஆனால், எம்எல்ஏ பதவியை உதறி தள்ளிவிட்டு பாஜகவில் ஐக்கியமான விஜயதரணிக்கு ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது பேசுபொருளாகி இருக்கிறது.