சென்னை: தினமும் பாலியல் டார்ச்சர் - இளைஞரை சிக்க வைத்த இளம்பெண்
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும்போது அவரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், சம்பந்தப்பட்ட இளைஞரை எச்சரித்திருக்கிறார். ஆனாலும் அந்த இளைஞர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. சம்பவத்தன்று இளம்பெண் பேருந்தில் செல்லும்போது அந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால், இளம்பெண், காவல் கட்டுப்பாட்டறைக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக காவல் கட்டுபாட்டறையிலிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையமான வேளச்சேரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராஜா என்றும் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இளம் பெண்ணை ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். ராஜாவின் காதலை இளம்பெண் ஏற்கவில்லை. அதனால்தான் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் ராஜா. இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். அதனால்தான் தைரியமாக எங்களிடம் புகாரளித்து ராஜாவை பிடித்துக் கொடுத்திருக்கிறார் இளம்பெண்' என்றனர்.