எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

Hero Image

தமிழகம் வந்த பிரதமர் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து கருத்து கூறிய அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி ’இது ஒரு அற்புதமான திருப்புமுனை’ என்று கூறினார். ஆனால் இதில் எந்த திருப்புமுனையும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்தநாள் விழாவில், இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் எந்த அரசியலும் இல்லை என்றும், தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரிக அரசியலாகவுமே விடுதலைச் சிறுத்தைகள் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" என்று கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்துள்ள வன்னியரசு, இதில் எந்தத் திருப்புமுனையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம் என்றும், சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்ட மாட்டோம் எனத் தங்கள் தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும், அதிமுக ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலில் இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.

"எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 இல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக - பாஜகவை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்," என்று வன்னியரசு தனது பதிவில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Edited by Mahendran